சென்னை சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று(நவ.25) 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் பர்வேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாநாட்டு அரங்கிற்கு வந்த முதலமைச்சருக்கு அமைச்சர் கீர்த்தனா இலச்சினை பொருந்திய பேட்ஜை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் காட்சிபடுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கண்டுகளித்தார். பின்னர் 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் சுமார் ரூ. 58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மொத்தம் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, போஸ்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழில் விரிவாக்கத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளன. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடி முதலீட்டில் புதிய திட்டத்தைத் தொடங்க போஸ்கோ நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.




