மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு மற்றும் மீனவர் மசோதா உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசு சில முன் நகர்வுகளை எடுத்து வருவதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எம்.பிக்கள் ஒன்றிணைந்து செயல்படவுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.







