மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றார். ஜூலை 25ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவிட்டுள்ள திருமாவளவன்,
”திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் @ikamalhaasanஅவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!” என குறிப்பிட்டுள்ளார்.







