என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள் என்று கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சின்னத்திரை பிரபலங்கள், யூடியூப் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இந்த விழாவில் இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியுப் பிரபலங்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்று மனித உரிமை சங்கம் என்றே ஓர் அமைப்பே இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டிருந்தது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்தி : ”இந்த ஆண்டில் நிறைய இசையை கொடுப்பேன்” – யுவன் சங்கர் ராஜா
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் தெரிவிக்கையில், “என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள். என்னுடைய லெட்டரை போர்சரி செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கத்தை வாடகைக்கு பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இது தொடர்பாக உண்மையான விளக்கத்தை அளித்து விட்டேன். காவல் நிலையத்தில் என் தரப்பிலும் புகார் அளித்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக இது போன்ற மோசடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி நடிகர் விஜய்க்கு கூட கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். முனைவர் பட்டங்களை இனி பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படிக்காதவர்களுக்கு இனி முனைவர் பட்டம் வழங்கக் கூடாது என யுஜிசி சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.







