லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
லியோ திரைப்படத்திற்கு காலை 9 மணியில் இருந்து திரைப்படம் வெளியிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிகள் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதால், விழா காலங்களில் ஒரு காட்சி கூடுதலாக வெளியிடலாம் என்ற அடிப்படையில் லியோ திரைப்படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லியோ படம் விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை.
விஜய் அரசியலுக்கு வரலாம், வராமல் போகலாம், அதெல்லாம் யூகமாக இருக்கலாம். அதெல்லாம் ஒன்றும் இல்லை. லியோ படத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. திரைப்படத்தில் தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதெல்லாம் மத்திய அரசின் சென்சார் போர்டு தான் பார்க்கும்.
விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கூட அண்மையில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜெயிலர் திரைப்படம் சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டி, தயாரிப்பாளர் தரப்பில் அனுமதி கேட்கவில்லை.
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் எழுதக்கூடிய பெயர்பலகை தமிழில் அவசியம் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதன் அடிப்படையில் வணிக நிறுவனங்கள் சார்ந்த அலுவர்களிடம் தொழிலாளர் நலத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழிலில் பெயர் பலகை எழுதாத வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல அதனால் ஒரு முறைக்கு இருமுறை வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாளுக்கு அரசு விழா முன்னெடுக்கும் வகையில் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்ச் சாமிநாதன் பேசினார்.







