மருந்து தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் இல்லை என்றும் மருத்துவ பணிகள் கழகத்தை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கர்ப்பிணி பெண்கள் குறித்து முழுவதுமாக அறிந்து கொள்ளும் ’தாய்மையுடன் நாம்’ என்ற செயலி தமிழகத்தில் முதன் முதலாக நாமக்கல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை மத்திய அமைச்சர்களின் ஆய்வு தொடரும். டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் புதிதாக 708 நகர்புற நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்படி நாமக்கல் நகராட்சியில் புதிதாக 7 நகர்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மருந்து தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் இல்லை. அரசியல் கட்சியினர் நேரிடையாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருந்து கிடங்குகளுக்கு சென்று தாராளமாக ஆய்வு நடத்தலாம். தமிழகத்தில் மருத்துவ பணிகள் கழகத்தை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி பழனிசாமி, தான் ஆட்சியில் இருப்பதாக கனவில் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.








