தமிழ்நாடு மின்வாரியம் பெற்றுள்ள 71 ஆயிரம் கோடி ரூபாய் கடனுக்கான வட்டியை எட்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சரின் முயற்சிகளால் மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்றும், 9,898 மெகாவாட் திறனுடன் புதுப்பித்தக்க மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
இதேபோல, சூரிய சக்தி மின் உற்பத்தியில் 6,137 மெகாவாட் திறனுடன் நாட்டிலேயே தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டுக்கு உதவும் வகையில் திட்டச் செலவில் 50 சதவீத மூலதன மானியத்தை 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால அடிப்படையில் குறைந்த வட்டியில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வாங்குவதற்கு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். தடையற்ற மின்சாரத்தை வழங்கவும் எதிர்கால மின்தேவைகளை எதிர்கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் எண்ணூர், உடன்குடி, உப்பூர், ஆகிய இடங்களில் பல்வேறு நிலைகளில் மொத்தம் 8,340 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் நிலையங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உதவும் வகையில் நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த நிலக்கரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், இதேபோல் போதுமான வேகன்களை ஒதுக்கி தடையற்ற நிலக்கரி சப்ளை செய்ய ரயில்வே துறைக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.
முந்திரா – மொஹிந்தர்கார் உயரழுந்த மின் விநியோகத் திட்டம் மற்றும் பிஸ்வநாத் சாரியாலி ஆக்ரா உயரழுத்த மின்விநியோகத் திட்டம் ஆகியவை தேசிய சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல தென் மாநிலங்களுக்கு நீதியும் சமத்துவமும் அளிக்கும் கையில் ராய்கார் – புகளூர் – திருச்சூர் உயரழுத்த மின் விநியோகத் திட்டத்தையும் தேசிய சொத்தாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்க வேண்டும். மத்திய நிதிநிறுவனங்களான REC மற்றும் PFC ஆகியவற்றிடம் பெறப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய நிதி நிறுவனங்களிடமிருந்தும் தமிழ்நாடு மின்வாரியம் இவ்வாண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மொத்தம் 71 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தற்போது REC மத்திய நிறுவனத்தின் சராசரி வட்டி விகிதம் 12.14 சதவீதமாகவும், PFC மத்திய நிதி நிறுவனத்தின் சராசரி வட்டி விதிதம் 11. 45 சதவீதமாகவும் உள்ளது என்றும், இதனை தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 8 சதவீத வட்டியாக குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.








