திமுக ஆட்சியில் உண்டியலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!

திமுக ஆட்சியில் உண்டியலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 
“விருதுநகர் மாவட்டம்  நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இப்படி ஒரு கொடூரக் குற்றம் நிகழ்ந்துள்ளது, ஏட்டளவில் கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில், கோவில் சிலைகள் சேதத்தில் தொடங்கி உயிரைப் பறித்து கோவில் உண்டியல் பணத்தைத் திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கையில், திமுக அரசின் தொடர் இந்து விரோதமும், கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களின் மதநம்பிக்கைகளையும் சட்டம் ஒழுங்கையும் ஒரு சேரத் தாக்கிய இந்தக் கொடூரக் குற்ற வழக்கில், வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல்துறை ஈடுபடக்கூடாது.
மேலும், கோவில் பணத்தைக் களவாட அப்பாவி உயிர்களைக் காவு வாங்கிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.