“சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் அதி்முக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா-வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

“நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசின் அகற்றப்பட வேண்டும். அந்த வகையில் வலுவான கூட்டணி அமைத்து இந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்றுவோம்.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக கூறியது. ஆனால் அது அமல்படுத்தப்படவில்லை. மாறாக மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓவிய திட்டத்தை தான் திராவிட முன்னேற்ற கழகம் பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை கடனாளியாக மாற்றியுள்ளது திமுக அரசு. நேற்றைய தினம் மத்திய அமைச்சரை சந்தித்தபோது தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேசவில்லை. தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை தொடர்பாக எடுத்துரைத்தோம். அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். ஓ.பி.எஸ் சேருவதற்கு வாய்ப்பு இல்லை.

சசிகலா, ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை. தமிழ்நாட்டில் அதி்முக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணி என்பது அவ்வப்போது அமைப்பது. பாரதிய ஜனதா கூட்டணியில் திமுகவும் இருந்திருக்கிறது. நாங்களும் இருந்திருக்கின்றோம். மிசா சட்டத்தில் ஸ்டாலினை கைது செய்து அடைத்த காங்கிரஸ் கட்சியுடன் தான் அவர்கள் தற்போது கூட்டணி வைத்து இருக்கிறார்கள். எனவே குறை சொல்வதற்கு ஒன்றுமில்லாத காரணத்தினால் ஏதாவது காரணத்தை கண்டுபிடித்து இதுபோன்று முதலமைச்சர் பேசி வருகிறார்.

அதிமுக ஆட்சி என்பது குறை சொல்ல முடியாத ஆட்சி, சிறப்பான ஆட்சி. அதிமுக ஆட்சியில் உள்ள குறையை கண்டுபிடிக்க முடியுமா, முடிந்தால் முதலமைச்சரிடம் சொல்லி பாருங்கள். திமுக ஆட்சியில் தான் ஊழல் மலிந்து கிடக்கிறது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. அனைத்து விவரத்தையும் ஆளுநரிடம் நாங்கள் மனுவாகவும் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.