விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“பாட்டாளி மக்கள் கட்சி நான் ஆரம்பித்த கட்சி. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்த கட்சியை இந்திய அளவில் பெரிய கட்சியாக நான் வளர்த்தேன். உறக்கம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்து நான் உருவாக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கே துரோகம் செய்தார். பின்பு கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அவரை கட்சியில் இருந்து நீக்கினேன். தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவலின் படி அன்புமணி பாமகவில் இல்லை.
நானே நிறுவனர் தலைவர். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லாதால் அவரை கட்சியில் இருந்து நீக்கினோம். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கட்சி என்னிடம் தான் உள்ளது. அவரிடம் சில பேர் உள்ளனர். அவர்கள் பணம் கொடுப்பார்கள், கார் கொடுப்பார்கள் என உள்ளனர். அன்புமணி கட்சிக்கு துரோகம் செய்ததால் கட்சியினர் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்.
அதேபோல் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு மக்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர் சொந்த தந்தைக்கு துரோகம் செய்தவர். அவரை எப்படி மக்கள் நம்புவார்கள். நேற்று நடந்த கூட்டணி பேச்சு வார்த்தை நீதி மன்ற அவமதிப்பு செயலாகும். நான் கூட்டணி பேசினால் மட்டுமே அது செல்லும்”
– இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.







