இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்றி தருவோம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படையினர் நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற தமிழகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படையினருக்கு வாழ்த்துகள். இளைஞர் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வரும் தேசிய மாணவர் படைக்கு நன்றிகள்.. இளைஞர் உள்ளங்களில் ஒற்றுமையை கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டிற்கு என்றும் தேச பக்தி உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் பணியை தேசிய மாணவர் படை செய்து வருகிறது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய மாணவர் படையின் இளைஞர் பணிகளை இன்னும் கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்றி தருவோம். குடியரசு தின அணிவகுப்பில் அகில இந்திய அளவில் 4வது இடத்தை தமிழ்நாடு தேசிய மாணவர் படையினர் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. சகிப்பு தன்மை இருந்தால் நம்மை வெல்வதற்கு யாரும் கிடையாது என்று மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினார்.







