“மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாரும் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் எழுப்பினார்.
இவைகளுக்கு முன் உரையின் தொடக்கத்தில் பேசிய ராகுல் காந்தி சபாநாயகர் பதவி குறித்தும் பேசினார்.
“சபாநாயகர் நாற்காலியில் அமர சென்றபோது நானும் அவருடன் சென்றேன். மக்களவையின் இறுதி நடுவர் நீங்கள். உங்களின் பேச்சுதான் இந்திய ஜனநாயகத்தை வரையறுக்கிறது. அந்த நாற்காலியில் நீங்கள் அமர்கையில் நான் உங்களுக்கு கைக்கொடுத்தேன். அப்போது பதிலுக்கு நீங்கள் எனக்கு நேராக நின்று கைக்கொடுத்தீர்கள். ஆனால் மோடி உங்களுக்கு கைக்கொடுக்கும்போது தலைவணங்கி கைக்கொடுத்தீர்கள். சபாநாயகர் இப்படி தலைவணங்கி வணக்கம் சொல்வது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு “பெரியவர்கள் முன்பணிந்தும், சமமானவர்களுக்கு கைக்குலுக்கவும் எனது கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துள்ளது” என சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார். உங்கள் வார்த்தையை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த சபையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாரும் இல்லை” என ராகுல் காந்தி மீண்டும் பதிலளித்தார்.







