“சமாதி இல்ல.. சன்னதி..” – கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் வடிவேலு பேட்டி!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியத்தை அவர் பார்வையிட்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியத்தை அவர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த நினைவிடம் ரூ.39 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. நினைவிடத்தில் அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்றும், கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்றும் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேல் கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த வடிவேலு கூறியதாவது:

“கலைஞர் அருங்காட்சியகத்தை பார்த்த பிரமித்துவிட்டேன். அருங்காட்சியகத்தில் பெரிய வரலாறே உள்ளது. அதனை பார்க்க 2 கண்கள் பத்தாது. 1000 கண்கள் வேண்டும். அவ்வளவு அழகா செய்துள்ளனர். கருணாநிதி எப்படி வாழ்ந்தார்? அவரது வரலாறு என்ன? அவர் எவ்வளவு பெரிய போராளி? அவரது போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அருங்காட்சியகத்தை பார்க்க 6ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நான் இன்று காசு கொடுக்காமல் பார்த்துவிட்டேன். உண்மையிலேயே கருணாநிதியை நேரில் பார்த்த வியப்பு. பக்கத்திலேயே இருந்து பேசுவது போன்ற உணர்வு உள்ளது. அவர் என்கிட்ட வந்ததற்கு நன்றினு சொன்னார். அவர் பக்கத்தில் இருந்து போட்டோ எடுத்தேன். அவரை பார்த்து நான் கும்பிட்டேன். அவர் என்னை பார்த்து கும்பிட்டார்.

திமுக தொண்டனுக்கு குலதெய்வ கோயில் இது. மாபெரும் கடவுள் போன்று இருக்கிறார். திமுகவில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாத அளவுக்கு அவர் கட்சியை வளர்த்துள்ளார் என்பதை உள்ளே சென்று பார்த்தால் தெரியும். இது சமாதி அல்ல. சன்னதி. இது மணிமண்டபம் அல்ல. மணிமகுடம் கலந்த மணிமண்டபம். மக்கள் பார்க்க துடிக்கிறார்கள். தொண்டருக்கு மட்டுமல்ல மக்களுக்கும், உலக தமிழர்கள் என எல்லாருக்குமான கொடுப்பனையான மணிமண்டபம் இது. இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாதமாக செய்துள்ளார். உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு நன்றி” என நடிகர் வடிவேலு தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.