நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு

நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அன்றாடம் பசு வெண்ணெய்யை உணவில் சேர்ப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது. அமுல் வெண்ணெய் சரி வர கிடைக்கவில்லை என வடமாநில மக்கள் புலம்பி வருகின்றனர்…

நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அன்றாடம் பசு வெண்ணெய்யை உணவில் சேர்ப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

அமுல் வெண்ணெய் சரி வர கிடைக்கவில்லை என வடமாநில மக்கள் புலம்பி வருகின்றனர் சந்தையில் நிலவும், பற்றாக்குறையைப் பயன்படுத்தி கொண்டு,போலியான அமுல் வெண்ணெய் சந்தையில் பரவி வருகிறது.  என்ன ஆச்சு அமுல் பேபிக்கு. அது குறித்த செய்தியை பார்க்கலாம்.

அண்ணல் காந்தியடிகளின் சுய சார்பு பொருளாதாரம் என்ற மந்திர வார்த்தையை மூலதனமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் அமுல்.வேளாண்மைக்கு மேலும்,வளம் சேர்க்கும் விதமாக,கால்நடை விலங்குகளிலிருந்து கறந்த பால் கொண்டு கட்டமைக்கப்பட்டதே அமுல் கூட்டுறவு நிறுவனம். வேளாண் பெருமக்கள் அமுல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்பது என்றும் நீங்கா பசுமையான வரலாற்று நிகழ்வு.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அமுல் நிறுவனம் வெண்ணெய், நெய், தயிர், மற்றும் பல்வேறு விதமான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும், சந்தைப்படுத்துதலிலும் முன்னிலையில் உள்ளது. வெளிநாடுகளுக்கும் அமுல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக அமுல் நிறுவனத்தின் மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுவதுண்டு. இப்போது தீபாவளி பண்டிகைக்குப் பின் வட மாநிலங்களின் பல பகுதிகளில் அமுல் வெண்ணெய் இல்லை என்ற செய்தி, அன்றாடம் பசு வெண்ணெய்யை உணவில் சேர்ப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பால் பொருட்களின் நுகர்வு, மற்ற நிறுவனங்களின் தயாரிப்பாக இருந்தாலும், வெண்ணெய்யும் நெய்யும் கட்டாயம் அமுல் தயாரிப்பாக இருக்க வேண்டும் என செயல்படுபவர்களுக்கு அமுல் வெண்ணெய் தட்டுப்பாடு வருத்தமான செய்தியாகவே உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்திலும், அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமுல் வெண்ணெய் தட்டுப்பாடு குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில் அமுல் தொழிற்சாலையிலிருந்து விநியோகம் குறைந்து விட்டது.இதனால் நாட்டின் பல பகுதிகளில் அமுல் வெண்ணெய் கிடைக்கவில்லை. டெல்லியில் கடந்த 20- 25 நாட்களாக அமுல் வெண்ணெய் விற்பனை நடைபெறவில்லை என்கின்றனர்.அமுல் நிறுவனம் அமைந்துள்ள குஜராத் மாநிலம் முழுவதும் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்பது 75 ஆண்டுகளில் முதல் முறை இது. மற்ற நிறுவனங்களின் வெண்ணெய்யும் பெரிதாக விநியோக வலையமைப்பில் இல்லை.வேளாண் பெருமக்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யும் அமுலும், மற்ற நிறுவனங்களும்,போதுமான வெண்ணெய்யை உற்பத்தி செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி டெல்லி,பஞ்சாப் என பல வட மாநிலங்களில் மளிகைக் கடை, சூப்பர் மார்கெட், டெலிவரி ஆப்-ஸ் ஆகியவற்றில் அமுல் வெண்ணெய் கிடைக்கவில்லை. இந்த வெண்ணெய் தட்டுப்பாடு அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடரும் எனவும் கூறுகின்றனர்.இந்நிலையில் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்எஸ் சோதி கூறுகையில், வெண்ணெய் உற்பத்தி இயல்பான நிலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அடுத்த நான்கைந்து நாட்களில்,அமுல் வெண்ணெய் விநியோகம் செய்யப்படும். அப்போது மக்களின் கைகளிலும்,நாவிலும் அமுல் வெண்ணெய் இருக்கும் என அறிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் அமுல் வெண்ணெய் பற்றாக்குறையால் போலியான அமுல் வெண்ணெய் சந்தையில் விற்பனைக்கு வருகிறது, இது அமுல் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பாதிக்கிறது.மறுபுறம் போலியான வெண்ணெய்யை உண்பதால் மக்களின் உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற ஆபத்தையும் எளிதில் ஒதுக்கி விட முடியாது.

75 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அமுல் நிறுவனம் உற்பத்தி, உள்நாட்டு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என சரியாக திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த வெண்ணெய் தட்டுப்பாடு.

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.