“வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம்” – டிடிவி தினகரன்!

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.

வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.