கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
“புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு” என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது. முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







