பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் கடந்த வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் தேனி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
பரிசோதனையில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், பெரியகுளம் வடகரை தென்கரை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெரியகுளம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.







