ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய இளைஞர்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்

ஓமலூர் அருகே ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி  தப்பி ஓடிய இளைஞர் வீட்டு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி…

ஓமலூர் அருகே ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி 
தப்பி ஓடிய இளைஞர் வீட்டு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி சேபெருமான்
கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவர் மகன் நாகராஜ் (வயது 35).
பட்டதாரியான இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

தனியார் வங்கியில் வேலை செய்து வந்த அவர், 35 லட்சம் ரூபாய் கையாடல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வந்தார்.

இவர் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை ,கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களுக்கு அதிக அளவில் வட்டி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்தாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பத்து ரூபாய் வட்டி வீதம் திருப்பிக் கொடுத்து வந்துள்ளார்.

இதன் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நேரடியாகவும் இணையம் மூலமும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாதத்தில் 15ஆம் தேதிக்குள் மூன்று தவணை என அவர்களுக்கு அந்தந்த மாதத்திற்கான வட்டி திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி பணம் யாருக்கும் செலுத்தாததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்பொழுது நாகராஜின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து நேரடியாக ஓமலூர் அருகே உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு வந்து விசாரித்த போது ஒரு வாரமாக வீடு பூட்டி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிலர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நாகராஜ் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காஞ்சிபுரம், பெங்களூர், திருச்சி, ஈரோடு, கோவை, ஆகிய பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அவர் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் ஏமாற்றிய பணம் சுமார் 50 முதல் 100 கோடி ரூபாய் இருக்கும் என முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுப் பல கோடி ரூபாய் இழந்த முதலீட்டாளர்கள் நாகராஜ் வீட்டில் முன்பு குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.