உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனில் ஜெட்பேக் அணிந்த ராக்கெட் மனிதன் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் சேவையை டோமினோஸ் வழங்கியுள்ளது.
வீட்டிலிருந்தபடியோ அல்லது தாங்கள் இருக்கும் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தோ பீட்சா ஆர்டர் செய்வோர் அனைவரின் ஒற்றை விருப்பம், விரைந்து டெலிவரி செய்யப்பட வேண்டும் என்பதே. உலகம் முழுக்க உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த எதிர்பார்ப்பு இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இந்நிலையில் பீட்சா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புதுபுது முயற்சியில் விரைந்து சேவை வழங்க முயன்று வருகிறனர்.
இந்நிலையில், டோமினோஸ் நிறுவனம் ஒரு படி மேலே போய் ஜெட்பேக் அணிந்த ராக்கெட் மனிதனை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பீட்சா டெலிவரி செய்யும் சேவையை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டனின் பில்டன் பகுதியில் கொண்டாடப்படும் கிளாஸ்டன்பரி திருவிழாவை கொண்டாடும் மக்களுக்கு ஜெட் பேக் மூலம் பீட்சா டெலிவரி செய்து டோமினோஸ் நிறுவனம் அசத்தியுள்ளது.
இதன்படி ஜெட் பேக்கும் டோமிமோஸ் சீருடையும் அணிந்த நபர் கடையில் வந்து பீட்சாவை பெற்றுக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு செல்கிறார். விளைநிலங்களையும், புல்வெளிகளுக்கும் மேல் அந்தரத்தில் பறந்து செல்லும் அந்த நபர், பத்திரமாக பீட்சாவை டெலிவரி செய்கிறார்.
ஜெட் சூட் நிறுவனமான கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸுடன் சேர்ந்து டோமினோஸ் இந்த சேவையை வழங்குகிறது. ஏற்கனவே விரைந்து சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நினைத்த நேரத்தில் பீட்சாவை வாங்கும் வசதியை டோமினோஸ் நிறுவனம் வழங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







