தொகுதி பார்வையாளர்களின் பணிதான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் என தனது கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தொகுதிகளுக்கு பார்வையாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. திமுக தொகுதி பார்வையாளர்கள் முதல் ஆலோசனை கூட்டம் ஆர் எஸ் பாரதி தலைமையில் மார்ச் 31 ஆம் தேதி காணொலி மூலம் நடைபெற்றது.
தொகுதிப் பார்வையாளர்களின் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளரை விட தொகுதி பார்வையாளர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளதாகக் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், தொகுதி பார்வையாளர்களின் பணிதான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் எனவும் தெரிவுத்துள்ளார்.







