கோவில்பட்டியில் வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சீனிவா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் ரூ.15 லட்சத்திற்கு குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, கூடுதல் வட்டிக்கு விட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆனந்தவள்ளியிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கியவர்கள், வட்டியும் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து குட்டி, ஆனந்தவள்ளிக்கு ரூ.15 லட்சத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு ஆனந்தவள்ளி தலைமறைவானார். இந்நிலையில் கடந்த வாரம் ஆனந்தவள்ளி, தனது மாமனாரையும், மாமியாரையும் தன்னுடைய வீட்டில் போய் இருக்கும்படியும், குட்டி என்ன செய்கிறாள்? என்று பார்ப்போம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி அவரது மாமனாரும், மாமியாரும் ஆனந்தவள்ளியின் வீட்டை திறந்து குடியேறினர். இதை அதே தெருவில் வசிக்கும் குட்டி பார்த்ததும், நேரடியாக அவர்களிடம் சென்று தகராறு செய்ததோடு, அவர்களை விரட்டியடித்து, வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பினார். பின்னர் மாலை, ஆனந்தவள்ளி வீட்டில் ஏதும் பணம் வைத்திருக்கிறாரா? என்று பார்ப்பதற்காக குட்டி அங்கு சென்றார். அங்குள்ள சாவிகளை வைத்து பீரோ மற்றும் பெட்டிகளை திறந்து பார்த்த போது, அவைகளில் பணம் ஏதும் இல்லை. ஆனால் பீரோவில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் மட்டும் இருந்தன.
ரூ.15 லட்சத்திற்கு வட்டியும், அசலும் தராத ஆனந்தவள்ளியை போலீசில் மாட்டி விட இந்த தோட்டா தகவலை குட்டி, கோவில்பட்டி மேற்கு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், ஆனந்தவள்ளியின் வீட்டுக்கு வந்து 8 தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும் தோட்டாவுக்குரிய ரிவால்வார் இருக்கிறதா? என சோதனையிட்டனர். ஆனால் ரிவால்வார் கிடைக்கவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆனந்தவள்ளியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், எனது கணவர் தான் இந்த தோட்டாக்களை வைத்திருந்தார். அவர் துப்பாக்கி வைத்திருந்தாரா? என்பது எனக்கு தெரியாது. என்னிடம் இதுபற்றி எதுவும் கூறியதில்லை. ஆனால் என்னுடைய வீட்டில் துப்பாக்கி கிடையாது. அவர் எதற்கு இந்த தோட்டாக்களை வைத்திருந்தார் என்பதும் எனக்கு தெரியாது. என்றார்.
ஆனந்தவள்ளியின் கணவர் அழகுமுத்து மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவர் எதற்காக தோட்டாக்களை வைத்திருந்தார்? யாரையும் பழிக்குப் பழி வாங்க வைத்திருந்தாரா? அல்லது சுய பாதுகாப்புக்கு வைத்திருந்தாரா? என்பது குறித்து அவரது கூட்டாளிகளிடம் கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வீட்டில் துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கிய சம்பவம், கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








