கடல் அரிப்பால் கடல் நீர் கிராமத்திற்குள் முழுமையாக புகும் அபாயம் உள்ளதால் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடல் அரிப்பு ஏற்பட்டு கடந்த 40 நாட்களில் சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் கிராமத்தில் உட்புகுந்துள்ளது. தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் மீனவ கிராம மக்கள் படகுகளை கடலுக்குள் செலுத்துவதிலும் பின்னர் கரை மேலே வருவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வந்தால் கிராமமே கடலுக்குள் மூழ்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் . இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .பின்னர் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் அரிப்பை தடுக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கு கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.







