நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் உதகை பழங்குடியினர் அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 36 வகையான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தோடர், குறும்பர், கோத்தர், காட்டுநாயக்கர், இருளர், பனியர் என 6 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காடும், காடும் சார்ந்த இடங்களில் வசித்து வரும் இவர்களுக்கு, கால்நடைகளை பராமரிப்பது, கைவினைப் பொருட்கள் செய்வது, தேன் எடுப்பது, வேட்டையாடுவதுதான் பிரதான தொழில்கள்.
நீலகிரியின் மைந்தர்களான பண்டைய பழங்குடியினரின் வாழ்வியல் முறை, பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், பழங்குடியினர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதகை அருகே உள்ள முத்தோரை பாலடா பகுதியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்குடியினரின் பாரம்பரிய உடைகள், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள், பழங்குடியினரின் கலைப்பொருட்கள், மாதிரி வீடுகள், ஆபரணங்கள், வேட்டையாடும் கருவிகள், உணவு சமைக்கப் பயன்படும் மண்பாண்ட பொருட்கள், மூங்கில் கரண்டிகள், விவசாய கருவிகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி பழங்குடியினரின் வாழ்வியல் முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இந்த அருங்காட்சியகம், சுற்றுலா ஆராய்ச்சி மையமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினரின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கோடை சீசனையொட்டி உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும், பழங்குடியினரின் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.










