கர்மவீரர் காமராஜரை நெகிழும் நீலகிரி மக்கள்

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர்தான் தங்கள் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் என்று நெகிழ்கின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள். காமராஜர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் என்னென்ன…

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர்தான் தங்கள் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் என்று நெகிழ்கின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள். காமராஜர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். அவரது ஆட்சிக் காலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொற்காலம் என்றே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், கல்வி, விவசாயம், மின்சாரம், தொழில் என பல்வேறு முக்கிய துறைகள் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற அடித்தளமிட்டவர் அவர். அவர்தான், தங்கள் மாவட்டத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் என்கின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள். காமராஜர் ஏற்படுத்திய வலிமையான அடித்தளம், பிரம்மிப்பை தரக்கூடியவை என்றும், அவரது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தக்கூடியவை என்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

காமராஜருக்கும் தங்கள் மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பு ஆழமானது என கூறும் நீலகிரி மாவட்ட மக்கள், அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான், தங்கள் மாவட்டத்தில், முதன் முறையாக குந்தா, அவலாஞ்சி ஆகிய அணைகள் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டு நான்கே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவை மட்டுமின்றி, கெத்தை, பில்லூர், எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்த ஆகிய அணைகளும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் கட்டப்பட்டதாக பெருமிதத்துடன் நினைவு கூறுகின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள். அணைகள் கட்டியதோடு, ஒவ்வொரு அணையின் மூலமும் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நீர்மின் நிலையங்களையும் அமைத்தவர் காமராஜர் என்கின்றனர் அவர்கள்.

குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி ஆகிய 5 நீர்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டதாக அவர்கள் நினைவு கூர்கின்றனர். அதனால்தான், நீலகிரி மாவட்டத்தில் தற்போது 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இவை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் மேலும் பல அணைகளையும் நீர் மின் நிலையங்களையும் அமைக்க திட்டமிட்டவர் காமராஜர் என கூறும் மாவட்ட மக்கள், ஆட்சி மாற்றம் காரணமாக அந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் பாண்டியார் புன்னம்புழா ஆற்றை மறித்து அணைக்கட்ட வேண்டும், அதோடு, அங்கு நீர்மின் நிலையம் அமைக்க வேண்டும், தெப்பக்காடு பகுதியில் அணையும், மாயார் பகுதியில் நீர்மின் நிலையமும் அமைக்க வேண்டும், கூக்கல்தொரை ஆற்றை மறித்து அணை மற்றும் மின் நிலையம் கட்ட வேண்டும் என காமராஜர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டதாகக் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்ட மக்கள். அதோடு, கல்லார் பகுதியில் ஒரு அணை, அப்பர் பவானி அருகே ஒரு அணை, சேரம்பாடி சோலாத்திபுழா ஆற்றில் ஒரு அணை உள்பட 9 அணைகளும், பல்வேறு நீர்மின் நிலையங்களும் அமைப்பதற்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறும் நீலகிரி மாவட்ட மக்கள், தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், பல நீர் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்திருக்க முடியும் என்கின்றனர்.

அணைகள், நீர்மின் நிலையங்கள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி தற்போது உள்ள ரோஜா பூங்காவில் விதை ஆராய்ச்சி மையத்தை உறுவாக்கியவர் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் என கூறும் நீலகிரி மாவட்ட மக்கள், கோடை காலத்தில் உதகையில் சட்டமன்றம் நடைபெறுவதற்காக அவரது ஆட்சிக் காலத்தில்தான், அரசு விருந்தினர் மாளிகை வாங்கப்பட்டது என்கின்றனர். காமராஜர் கல்வித் தந்தை மட்டுமல்ல, அவர்தான் அணைகளின் நாயகன், அவர்தான் நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டுகின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.