காப்பிச் செடியின் இனத்தை சேர்ந்த பைரொஸ்டிரா லால்ஜி ( Pyrostria laljii)என்ற புதியவகை மரம் இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனலஸ் பொட்டனிகி ஃபெனிக்கி என்ற அறிவியல் ஆய்விதழில் (Annales Botanici Fennici) சில மாதங்களுக்கு முன்பு பைரொஸ்டிரா லால்ஜி (Pyrostria laljii) என்ற புதிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானது. இந்த தாவர வகை பைரொஸ்டிரா என்ற இனத்தை சேர்ந்தது. இந்தியத்தாவரவியல் ஆய்வாளர்கள் எம். சி நைக், ஸ்ரீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழகத்தை சேர்ந்த எம்.பீமாலின்கப்பா, மனிலா மற்றும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் அக்சல் எச்.அரியொலா ஆகியோர் இணைந்து இந்த தாவர வகையை கண்டுபிடித்துள்ளனர்.
பைரொஸ்டிரா என்ற இனம் இந்தியாவில் இதுவரை காணப்பட்டது இல்லை. மடகாஸ்கர் பகுதிகளிலே இந்த இனவகை அதிகம் காணப்படுக்கிறது. முதல் முறையாக தெற்கு அந்தமானின் வேன்டோர் வனப்பகுதிகளில் பைரொஸ்டிரா லால்ஜி, கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள திருர் வனங்களிலும் சிடியா வனங்களிலும் இந்த வகை தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பைரொஸ்டிரா லால்ஜி, அறிவியலுக்கு மிகவும் புதியது. 15 மீட்டர் நீளம் கொண்ட மரமான இது, வெள்ளை நிறத்திலும் அதன் இலைகள் நீள்சதுர வடிவிலும் உள்ளது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) பைரொஸ்டிரா லால்ஜியை அழியும் நிலையில் உள்ள தாவரவகை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய தாவரவகை ஆய்வு மற்றும் அந்தமான் நிகோபார் பிராந்திய மையத்தின் இணை இயக்குநர் லால் ஜி சிங்கின் பெயர் இந்த தாவர வகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியபோது ‘பைரொஸ்டிரா இனவகை இந்தியாவில் காணப்படவில்லை என்றாலும், ருபெசியே (Rubiaceae) குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்கள் இந்தியாவில் இருக்கிறது. மேலும் இதே குடும்பத்தை சேர்ந்த சின்சோனா (cinchona), காப்பி( coffee), அடினா (adina), ஹமிலியா (hamelia), கலியம் (galium), மொரின்டா (morinda), முசயண்டா (mussaenda), கர்டினியா ( gardenia) தாவரங்கள் பொருளாதார மதிப்பு கொண்டது. இதுபோல் பைரொஸ்டிரா லால்ஜிக்கும், பொருளாதார மதிப்பு இருக்கிறதா என்பது தொடர்பான ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறி உள்ளார்.







