கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை இவையெல்லாம் ஒருங்கேற வாழ்வாதாரம் இன்றி வசித்து வருகிறது ராஜகுமாரனின் குடும்பம்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் வசித்து வருபவர் லட்சுமணன், கவிதா தம்பதி. லட்சுமணனுக்கு வயது 76. இவர்களுக்கு ராஜகுமாரன் (19), வினோஸ்ரீ (10) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் சுமார் 12 வருடங்களாக சிதம்பரம் கஸ்பா பழைய புவனகிரி சாலைக்கு அருகில் வசித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரிடரான கஜா புயலின் போது அவர்களது வீடு முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
தாங்கள் வாழ்ந்த வீட்டை இழந்த லட்சுமணன் குடும்பத்தினர் குறைந்த வாடகைக்கு வீடு ஒன்றில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர், நாளடைவில் குடும்ப வறுமையின் காரணமாக வீட்டின் வாடகையை சரியாக வழங்க முடியாத காரணத்தினால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லி உள்ளார். தனது இரண்டு பிள்ளைகளுடன் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வந்த லட்சுமணனுக்கு அப்போதைய சிதம்பரம் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினராக இருந்த திருவரசு என்பவர் நகராட்சி கழிப்பிடத்தில் உள்ள சேமிப்பு அறையில் (Store Room) தங்க வைத்துள்ளார். நாளடைவில் அதுவே அவர்களது இருப்பிடமாக மாறிப்போனது. ராஜகுமாரனின் தந்தை லட்சுமணனுக்கு வயது மூப்பின் காரணமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை.
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் சொற்ப ஊதியத்திற்கு தினக் கூலியாக சென்று பிள்ளைகளை படிக்கவைத்தும், குடும்பத்தையும் நடத்தி வருகிறார் கவிதா.
கடந்த 2021 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு (கணக்குப் பதிவியல்) பிரிவில் பள்ளி படிப்பை முடித்த ராஜகுமாரன் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் போனது. குடும்ப வறுமையின் காரணமாக தற்போது கூலி வேலைக்குச் சென்று வருகிறார். தங்கிக்கொள்ள நிலையான இருப்பிடம், தன்னுடைய படிப்பு, தங்கையின் படிப்பு, குடும்பத்தின் வறுமை இவையெல்லாம் எப்படியாவது நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு நாளையும் பெரும் போராட்டத்தோடு நகர்த்தி வருகிறார்.
“இதை செய்தியா போட்டா எங்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பாங்களா, எங்களை படிக்க வைப்பாங்களா” என்று அவர் கேட்கும் கேள்விகள் இதயத்தை சற்று கணக்கவே செய்கிறது. இதனிடையே தற்போது கழிப்பிடத்தை புதுப்பிப்பதற்காக அவ்விடத்தை விரைவில் காலி செய்யுமாறு நகராட்சி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், செய்வதறியாது திகைத்து வரும் ராஜகுமாரனும், அவரது குடும்பத்தினரும் நடுத்தெருவிற்கு தள்ளப்படும் அவலத்தில் உள்ளனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாணவனுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலமாக நீங்களும் உதவலாம்.








