“வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!

கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மெய்யழகன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ”வா வாத்தியார்”. இப்படத்தை ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி,  சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றிருந்தார் எனவும் அக்கடன் தொகையை ஞானவேல் ராஜா திருப்பி செலுத்தும் வரையில் வா வாத்தியார் படத்தை வெளியிடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஞானவேல் ராஜா  கடன் தொகையை  திருப்பி செலுத்தும் வரையில் ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட தடை விதித்தது.

இதனால் டிசம்பர் 5 மற்றும் 12 என இரு முறை வெளியீடு அறிவிக்கப்பட்டும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.