தலைநகர் டெல்லியில் தெரு நாய் கடிகளால் குழந்தைகள், பெரியவர்கள், பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதனிடையே டெல்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் முதலில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த உத்தரவில் சில மாற்றங்களை மேற்கொண்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு நாய்கள் ஆர்வலர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தெரு நாய்கள் விவகாரத்தில் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சில விதிமுறைகளை புதிதாக வகுத்திருப்பதாகவும் அது மனிதத்தன்மையை இல்லாமல் இருப்பதாகவும் வாதங்களை முன் வைத்தார்.
அப்போது இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரிக்கப்பட இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த அமர்வு அமைக்கப்படவில்லை. வரும் ஜனவரி 7ஆம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் அன்றைய தினம் நாங்கள் சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிக்கிறோம். அதற்குப் பிறகு எது மனிதத் தன்மை இல்லாமல் இருக்கிறது என்பதை நீங்களே சொல்லுங்கள் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மீண்டும் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெருநாய்களை முழுமையாக அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவைகள் காப்பகங்களில் அடைக்கப்படவும் இல்லை வெறுமென அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்
அதற்கு மீண்டும் பதில் அளித்த நீதிபதிகள், அதிகாரிகள் அவர்கள் செய்வதை செய்யட்டும் நாங்கள் வரும் ஜனவரி 7ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கிறோம் என கூறி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.







