சிவகங்கை மாவட்டம் பரளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை(20). இவர் கட்டிட தொழிலுக்காக இரு சக்கர வாகனத்தில் சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த நித்திஷ் பாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜதுரை மற்றும் நிதிஷ் பாண்டியன் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் நித்திஷ் பாண்டியனின் பின்னால் அமர்ந்து வந்த அவரின் தம்பி தமிழரசன்(18) காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







