மராட்டிய மன்னர் சிவாஜி வேடத்தில் நடித்ததால் சிவாஜி கணேசன் ஆனார் நடிகர் திலகம் என்பது தெரியும். ஆனால் மற்றொரு நாடகத்தில் நடித்த லட்சுமி நரசிம்மன் நடிகர் ஆன கதைதான் இது…
ராசிபுரம் சுப்பிரமணியன் லட்சுமி நரசிம்மன் என்கிற ஆர்.எஸ். மனோகர், 1950களில் நாடக வாய்ப்பு தேடி சென்னை வர, முதல் வாய்ப்பு தந்த அந்த மனிதரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். 31 மேடை நாடகங்களை, சுமார் எட்டாயிரம் முறை அரங்கேற்றி, எட்டாத உயரத்தை தொடப்போகிறோம் என்பது பின்னர் மனோகர் என்றழைக்கப்பட்ட அவருக்கே தெரியாது. ராஜாம்பாள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான மனோகர், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த வண்ணக்கிளி திரைப்படத்தில் வில்லத்தனம் நிறைந்த கதாநாயகனாக, அடிக்கிற கைதான் அணைக்கும் என மிரட்டலான நடிப்பை தந்தார்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது மனோகரா என்ற நாடகத்தில் நடிக்க கதாநாயகன் வராததால், திடீர் மாப்பிள்ளை போல மனோகராவாக நடித்த லட்சுமி நரசிம்மன், அதன் பிறகு மனோகர் என்றழைக்கப்பட்டார். பிறகென்ன, நாடகத்திலும் திரையுலகிலும் அவரது கொடி பறக்கத் தொடங்கியது. நாடகக்கலையில் பலர் சிறந்து விளங்கிய காலத்தில் தனது நாடகங்களில் பிரமாண்டம் காட்டிய மனோகர், எம்ஜிஆரால் பின்னர் நாடகக் காவலர் என பாராட்டப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=H3IjGy0fHFM
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல திரைப்படங்களில் நடித்தார் மனோகர். ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் என எம்ஜிஆர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மனோகர். படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம், பழமையான நாடகத்திற்கு தேவையான பொருட்களை தேடிச்சென்று வாங்கிட எம்ஜிஆர் உதவியதாக குறிப்பிட்டுள்ளார் மனோகர்.
இலங்கேஸ்வரன், சூரபத்மன் என புராணங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார் மனோகர். ஒரு கட்டத்தில் தனது நாடகங்களுக்கு வரவேற்பு குறைந்ததால், அரங்கப்பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய மனோகருக்கு பின்னர் எம்ஜிஆர் உதவினார். நாடகக்கலையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற மனோகர், என்றென்றும் நிலைத்து நிற்கிறார்.







