நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள உத்தரவில், நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. வரும் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
தனித்தனி நுழைவுத் தேர்வுகள் மூலமாகவோ, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலோ, மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, CUET எனப்படும், Common University Entrance Test மூலம் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமல்லாது, அவற்றுடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. CUET தேர்வு, வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







