முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

வாழ்வாதாரம் தொலைத்த பூக்கடை அக்காக்கள்…!


வாசுகி

கட்டுரையாளர்

சங்கக் காலம் முதல் இன்றைய இன்ஸ்டா காலம் வரை, மலர்கள் நம் உணர்வோடு கலந்தவையாக உள்ளது. போருக்கு புறப்படும்போது, அந்தப்புரத்திற்கு செல்லும்போது, வேட்டையாடும்போது… இப்படி வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப மன்னர்கள் பூக்களை சூடுவது வழக்கம் என்று, இலக்கியங்களில் உள்ள சான்றுகள் கூறுகின்றன.

திருமணம், இறுதி ஊர்வலம், பிரிவு உபச்சார விழா, இறைவனை ஆராதனை செய்ய… இப்படியாக மலர்களுக்கும் நமக்கு உணர்வு கலந்த ஓர் உறவு இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் சாலை நெடுக மலர்களை ஏன் தூவுகிறார்கள்? இறப்புக்கு இறுதியாக வரும் ஒரு உறவினர், அந்த மலர் தூவியப் பாதையில் நடந்தால் வந்துவிடலாம்.

இப்படி நம் உணர்வோடு கலந்த மலர்களை நமக்கு தரும் பூக்கடை அக்காக்களை பற்றி, நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவர்களின் துயரங்களை, வலிகளை கேட்க, நமது காதுகளை கொடுத்திருக்கிறோமா?. இந்த கடினமான கொரோனா காலத்தை அவர்கள், எப்படி கடந்தார்கள், இன்னும் எப்படி எல்லாம் கடக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தைகளில் விவரித்ததை அப்படியே பார்ப்போம்…

“என் பெயர் மாதவி, கோடம்பாக்கம், ஆற்காடு ரோடு அருகே, ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். பூ விற்பனை செய்வது தான் எனது தொழில். கணவர் கிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுகிறார். இரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது வருமானம்தான் குடும்பத்தின் வாழ்வாதாரம். கொரோனாவுக்கு முன்பு வரை, ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ. 1200 வரை வருமானம் கிடைக்கும். கொரோனாவிற்கு பின்பு தினமும் ரூ.500-க்கு விற்பனை ஆவதே அபூர்வமாக இருக்கிறது.

கொரோனாவிற்கு முன்பு ரூ.50,000 வரை கடன் வாங்கியிருந்தேன். அப்போது இருந்த வருமானத்தில் செலவு போக தவணை முறையில் கடனை செலுத்தி வந்தேன். ஆனால் கொரோனாவிற்கு பிறகு தினசரி செலவுகளை சமாளிக்கவே, கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. இப்போது ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறேன். பழைய கடனையும் செலுத்த வேண்டும், புதிய கடனுக்கும் தவணை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தொகையை கடனாக தரும் தண்டல்காரர்கள், கடனை வசூலிக்க தினமும் வந்துவிடுவார்கள்.

அன்றைய வியாபாரத்தில் கிடைத்த முழு பணத்தையும், அவர்களுக்கு தந்துவிடும் நிலை ஏற்படுகிறது. கோவில் திறப்பினால் மட்டும் பூ வியாபாரம் அதிகரித்துவிடாது. மக்களிடத்தில் இப்போதும் பணம் இல்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தினமும் பூ வாங்கும் நபர்கள் கூட வெள்ளிகிழமை வாங்குகிறேன் என்கிறார்கள்.

எனது மகன் இப்போது 8-வது வகுப்பு படிக்கிறான். எங்களால் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்பதால், அவன் ஆன்லைன் வகுப்பு தடைபட்டு நிற்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும். அதில் பாதித் தொகையை செலுத்தினால்தான், அவன் ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்கப்படுவான். குழந்தைகள் ஆசையாக சில நேரம் சிக்கன் ரைஸ், புரோட்டா கேட்பார்கள். அதைகூட எங்களால் தற்போது வாங்கித்தர முடியவில்லை. மக்களின் நன்மைக்காக தற்போதைய அரசு பல நலத்திட்டங்களை அறிவிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்களை, தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். “எல்லாம் சரியாகிவிடும்” என்ற நம்பிக்கையில் மீண்டும் பூ விற்கத் தொங்கினார் மாதவி.

லிபர்ட்டி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் பூக்கடை வைத்திருக்கும் பாக்கியத்திடம் பேசினோம், “கோடம்பாக்கம் அம்மன் கோவிலுக்கு அருகில்தான் வசித்து வருகிறேன். பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கே தான். அம்மா கிழங்கு, வேர்க்கடலை விற்கும் தொழில் செய்து வந்தார். அப்பா கட்டட தொழிலாளி. நான் படிக்கவில்லை. எனது கணவர் இறந்து 18 வருடங்களாகிறது. தீவிர குடிப்பழக்கம் கொண்டவர், அதுமட்டுமல்ல குடித்துவிட்டு வந்து தினமும் அடிப்பார். தொடர் குடியால்தான் உடல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

எனக்கு 2 ஆண் குழந்தைகள், ஒருவர் மெக்கானிக்காக வேலை செய்கிறார். இன்னொருவன் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்துவிட்டான். எனது குழந்தைகள் வருமானத்தில் நான் வாழ விரும்பவில்லை என்பதால், கடந்த 8 ஆண்டுகளாக பூ விற்று வருகிறேன். கொரோனாவிற்கு முன்பு தினமும் ரூ. 1,500 வரை வியாபாரம் நடந்தது. இப்போது ரூ.500 வருமானம் கிடைப்பதே பெரும் பாடாக இருக்கிறது.

கொரோனாவிற்கு முன்பு நான் கடன் வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது வாழ்க்கை நடத்தவே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.40,000 வரை கடன் வாங்கியிருக்கிறேன். இதில் 10 ஆயிரத்தை அடைத்துவிட்டேன். மாதம் ரூ 3,500 வீட்டு வாடகை, அதைகூட செலுத்த முடியவில்லை. தற்போது நாங்கள் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறோம். கொரோனா நீங்கி பழைய நிலைக்கு சென்னை திரும்பாதா என ஏங்குகிறேன்” என்கிறார் பாக்கியம்.

 

லிபர்ட்டி அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு முன்பு பூக்கடை வைத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். “எனது 22-வது வயதில் சென்னைக்கு கல்யாணம் செய்துகொண்டு வந்தேன். திண்டிவனத்திற்கு அருகில் இருக்கும் ஆலாபாக்கம் கிராமம்தான், எனது சொந்த ஊர். அப்பா விவசாயி. பெண் குழந்தைகள் எல்லாவற்றுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட பிறகு, பயிர் வைக்க யாரும் ஊரில் இல்லாததால், வயலை விற்றுவிட்டார்.

எனது கணவர் துணிகளுக்கு சாயம் போடும் வேலை செய்தார். அவருக்கு நான் இரண்டாவது தாரம். வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. அவர் மதுவுக்கு அடிமையாகும் முன்புவரை. தொடர் குடி, சண்டை இப்படியாக வாழ்க்கை சென்றது. இப்போது அவர் இல்லை. எனது 30 வயது முதல் 55 வயதுவரை வீட்டு வேலை பார்த்து குடும்பத்தை நடத்திவந்தேன். 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டே. கடந்த 7 வருடங்களாக பூக்கடை நடத்தி வருகிறேன்.

கொரோனாவிற்கு முன்பு வியாபாரம் நன்றாகவே இருந்தது. தற்போது நஷ்டத்தில்தான் போய் கொண்டிருக்கிறது. கடவுள் எல்லாவற்றையும் சரி செய்வார், மீண்டும் இயல்பு திரும்பும்”- நம்பிக்கை மிளிர கூறினார் விஜயா.

இதுபோல் நம்மிடம் பேசிய தனலட்சுமி, “வீட்டில் கறி எடுத்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இரண்டு வேளை சாப்பாட்டில், ஒருவேளை தண்ணீச் சோறுதான். கொரோனாவால் வியாபாரம் குறைந்து போனதால், எனது பேத்திகளின் படிப்பு செலவிற்கு கூட பணம் கொடுக்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

இந்த கொரோனா காலம் அனைவருக்கும் சமமாக இல்லைதான். முன்பு வாங்கிய கடன், கொரோனா ஊரடங்கால் வாழ்வை ஓட்ட தினசரி செலவுகளுக்கு வாங்கிய கடன், வீட்டு வாடகை பாக்கி, குழந்தைகளின் கல்விக் கட்டணம் இப்படி அனைத்து விதத்திலும் கொரோனா தொற்று, வறியவர்களை மேலும் வறியவர்களாக்கியிருக்கிறது.

“நாம் என்ன செய்ய முடியும்” என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கடவுள் மறுப்பாளராக கூட இருக்கலாம். அன்றாட வாழ்வில், பூ விற்கும் அக்காவை காண நேர்ந்தால், ஒரு 10 ரூபாய்க்கு கொஞ்சம் பூ வாங்கிச் செல்லுங்களேன். அவர்கள் வாழ்விலும் மணம் வீசட்டும்….

(நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட பிரத்யேக செய்தி)

Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Ezhilarasan

பேப்பர்- பேனா முறையில் மறுதேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Saravana Kumar

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!