நாகை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் கீழையூரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அங்கு பெற்றோர் 100 நாள் வேலைக்கு சென்றதால் 14 வயதான சிறுமி மட்டுமே இருந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய மதியழகன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அவர்களைக் கண்டதும் மதியழகன் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து நாகப்பட்டினம் போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.







