கடும் பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நேற்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டணிக் கட்சிகளும் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்த நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்ப அழைப்பு விடுத்தார். இதனையடுத்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், இன்று மற்றும் நாளை ஆகிய இருநாட்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனிடையே நிதியமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற அலி சப்ரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே பொதுமக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொருளாதார நெருக்கடி காரணமாக வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால், சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஊழியர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்களின் தூதரகங்களைத் தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 30 ஆம் தேதி முதல் 3 நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் செயல்படாது என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.







