ஆயுதம் இல்லாத நிலையிலும், எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் பழந்தமிழர்களின் அடிமுறை கலை, லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் மாணவ, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்று அடிமுறை. குமரி கண்டத்தில் சித்தர்களால் தோன்றி வளர்ந்து புகழ்பெற்ற தற்காப்புக் கலைதான் அடிமுறை என்று வரலாறு சொல்கிறது. கைகளாலும், கால்களாலும் தாக்கி எதிராளியை வீழ்த்தும் இந்த கலை, ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த மரபுக் கலை. சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவம்தான் இந்த அடிமுறை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை பிரபலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அடிமுறை கலையைக் கற்றுக்கொடுக்க அக்கலையின் ஆசிரியர் தன் மாணவனை 12 ஆண்டுகள்,அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்றுத் தருவார் என்று வரலாறு சொல்கிறது. இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால், அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையைப் பயன்படுத்தியே சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது. 21 நாட்கள் தொடங்கி 90 நாட்கள் வரை, அடிமுறையின் நிலைக்கு ஏற்ப பயிற்சி காலம் மாறுபடும். தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்த அடிமுறை பயிற்சி பெரிதும் கைகொடுப்பதாக பெண்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையை அதிகரித்து, உடல் அளவிலும் மனதளவிலும் ஊக்கத்தை கொடுக்கும் இந்த அடிமுறை கலையை பெண்கள் அனைவரும் கற்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார் அடிமுறை பயிற்சியாளர். அடிமுறையை மையப்படுத்தி, உலக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, இதன்மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுக்கும் ஆன்லைன் மூலம் அடிமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
Advertisement: