தமிழ் சினிமாவின் ரூட்டுத் தல; புதிய அத்தியாயம் எழுதிய பா.ரஞ்சித்

ஒரு திரைப்படம் பார்வையாளனை தான் வாழுகின்ற சமூகத்தோடு தொடர்புபடுத்தி அவனை சிந்திக்க வைக்குமானால், அது மக்களால் கொண்டாடக்கூடிய படமாக மாறுகிறது. அதோடு பார்வையாளனை தான் அடிமைப்படுத்துகிறோமா அல்லது அடிமைபடுத்தப்படுகிறோமா என சிந்திக்க வைத்து சமத்துவத்தை…

ஒரு திரைப்படம் பார்வையாளனை தான் வாழுகின்ற சமூகத்தோடு தொடர்புபடுத்தி அவனை சிந்திக்க வைக்குமானால், அது மக்களால் கொண்டாடக்கூடிய படமாக மாறுகிறது. அதோடு பார்வையாளனை தான் அடிமைப்படுத்துகிறோமா அல்லது அடிமைபடுத்தப்படுகிறோமா என சிந்திக்க வைத்து சமத்துவத்தை கற்பிக்கும் படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமாக வந்த வண்ணம் இருக்கின்றன. நாம் பேசும் அரசியலில் யாரை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற தெளிவோடு, அடித்தட்டு மக்களின் வாழ்வினை தன்னுடைய கலை வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் பா.ரஞ்சித்.தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான கருத்துகள், கதைகளைக் கொண்ட படங்கள் வந்திருந்தாலும் அவை வெகு சிலவே. உண்மைக்கு நெருக்கமான அரசியலை திரைப்படுத்தி, எவ்வித சமரசங்களுக்கும் உட்படாமல் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சாதியம், விளிம்பு நிலை மக்கள் குறித்த விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். தமிழ் சினிமா உலகில் பா.ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை சமூக மக்களுக்கான நியாயத்தை, அரசியலைப் பேசும் சினிமாக்களுக்கான வெளி பெருகியது.

தமிழ் திரையுலகின் காலத்தை பா.ரஞ்சித் வருகைக்கு முன், பா.ரஞ்சித் வருகைக்குப் பின் என பிரிக்கலாம். இந்நிலையில் பா.ரஞ்சித் தமிழ் திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் ரஞ்சித் படங்கள் ஏற்படுத்திய தாக்கமும் திரையுலகைத் தாண்டி அவர் நிகழ்த்திய மாற்றங்கள் ஏராளமானவை.

சமூக அக்கறை கொண்ட படங்கள்,

சென்னை 600028, கோவா திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அடிப்படையில் ஓர் ஓவியர். முதல் திரைப்படமான அட்டக்கத்தி 2012ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. எந்த எதிர்பார்ப்புமே இன்றி சென்ற ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தை அளித்தது அத்திரைப்படம்.

இதுவரை தமிழ் சினிமா பேசாத, பேச மறந்த, பேசத் தவறிய கதைக்களத்தை கையில் ஏந்தியிருந்தார் பா.ரஞ்சித். காதலை புனிதப்படுத்தும் வழக்கமான சினிமாவைக் காட்டிலும், விளிம்பு நிலை மக்களின் காதல் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருந்தார். தமிழர்களின் ஆதி கலையான பறையிசை, ஒப்பாரி, உணவுமுறை உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி, மக்கள் மத்தியில் தனக்கென தனிஇடத்தை பிடித்தார் பா.ரஞ்சித்.

அட்டக்கத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இதில் கார்த்தி,கேத்ரீன் தெரேசா,கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் பா.ரஞ்சித்தின் நேரடியான அரசியல் படமாக இருந்தது. திரைப்படத்தின் மையக்கருவே சுவர். அந்த சுவரை வைத்து நடக்கும் அரசியல் சண்டை, அதற்கு பலியாகும் எளிய மக்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இறுதியில் படிப்பின் அவசியத்தையும், அதன் முக்கியத்தவத்தையும் கூறியிருந்த இந்த, படம் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றது.

மெட்ராஸ் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித்தின் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார். தமிழ் திரையுலகில் இதுவரை எந்த இயக்குநரும் ரஜினியை காண்பிக்காத தோற்றத்தில் கண்பித்து இருந்தார். இதிலும் எப்போதும் போல் அரசியலை பேசியிருந்தார், மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களுக்காகப் போராடும் கபாலீஸ்வரன் (ரஜினி), ஒரு கட்டத்தில் மக்களுக்காக கேங்ஸ்டர் ஆகிறார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வர்வேற்பை பெற்றதோடு, வெற்றியையும் பெற்றது.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியை வைத்தே காலா படத்தை இயக்கினார். நில அரசியலை மையப்படுத்திய இப்படத்தில் விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைக் குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினியைக் காட்டியிருந்தார். நாம் வாழுகின்ற நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் எல்லா வசதிகளோடும், மற்றொரு பிரிவினர் ஏதுமற்ற நிலையில் ஒதுக்கப்படுவதையும் விளக்கியிருந்தார். அது மட்டுமில்லாமல் ஒரே இடத்தில் வசிக்க கூடிய மக்கள் எப்படி முரண்பட்டு வெவ்வேறு வாழ்வியலை வாழ்கின்றனர் என்பதை தெளிவாக காட்டியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். இப்படத்திற்குப் பின்பு விளையாட்டை மையமாக வைத்து சார்பாட்ட பரம்பரை என்ற படத்தை எடுத்தார். இப்படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் நடிகைகள் அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தியிருந்தினர். இப்படத்திற்காக போடப்பட்ட செட் முதற்கொண்டு இதற்காக தயாரன இயக்குநர், உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கடும் உழைப்பை கொடுத்திருந்தனர். இப்படத்திலும், பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசி இருப்பார். 1970ம் ஆண்டு சென்னையில் நடந்த குத்துச்சண்டையை கண்முன் கொண்டு வந்து இருந்தார். குறிப்பாக திமுக, அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றிய பல வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றன. அனைவரது கடும் உழைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தை திரையில் காண முடியவில்லையே என ரசிகர்கள் வருந்தினர்.

சார்பட்டா பரம்பரை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இதைத்தொடர்ந்து சியான் விக்ரமின் 61 வது படமும்,வேட்டுவம், கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா. ரஞ்சித்தின் படங்களில் பெண்கள்,

பா. ரஞ்சித் திரைப்படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு என்று தனி முக்கியத்துவத்தை அளித்து வருகிறார். தனது அனைத்து படங்களிலும் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதிலும், அவர்களுக்கான இடத்தை அளிப்பதிலும் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை பா.ரஞ்சித். முதல் படம் தொடங்கி அட்டக்கத்தி’ மீனாட்சி, ‘மெட்ராஸ்’ ரமா, ‘காலா’ ஈஸ்வரி ராவ், ‘சார்பட்டா’ மாரியம்மா என எல்லோரும் தைரியமாக பேசும் பெண்களாகவும், ஆண்களை ஆளுமை செய்யக்கூடிய பெண்களாகவும் இருந்தனர்.
பெரும்பாலான தமிழ் படங்களில் பெண்களை எதுவும் தெரியாதவதர்களாகவும் எதார்த்த வாழ்விற்கு சற்றும் பொருந்தாதவர்களாகவும் காண்பித்த தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில், அட்டக்கத்தி படத்தில் இயல்பாக மகனை கேலி செய்யும் அம்மாவாக, குடித்துவிட்டு சலம்பும் கணவனை அடித்தும் அதே சமயத்தில் அதட்டி சோறு ஊட்டும் மனைவியாக நம் வீட்டு பெண்களை கண்முன் நிறுத்தி இருப்பார் .

மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் அம்மா ரமா சத்தமாக பேசுபவராக இருப்பார். ரஞ்சித் படங்களில் பெண்கள் பெரும்பாலும் சத்தமாக பேசுபவர்களாகவே இருப்பார்கள், காதலை, அன்பைக்கூட போலிக் கோபத்துடன் உரக்கச் சொல்பவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் யதார்த்த வாழ்வில் பெண்கள் எப்படி உடையணிவார்கள் என்பதை அப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.

காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் ரஜினியை அதட்டுபவராக இருப்பார். அதே படத்தில் புயல் என்ற பெண் கதாப்பாத்திரம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டது, புயல் கதாபாத்திரம் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய இளம்பெண், போராளி. ஒரு போராட்டத்தின்போது அவளை அவமானப்படுத்தும் நோக்கில் மூன்று காவலர்கள் சேர்ந்து புயலின் சுடிதார் பேன்ட்டை உருவி எறிவார்கள். சட்டென்று அதிர்ச்சியில் நிலைக்குலைந்து போகும் புயல் ஆடையை நோக்கி தவழ்ந்து செல்வாள். ஆனால், ஆடையை எடுக்காமல் அருகில் இருக்கும் லத்தியை எடுத்து மூவரையும் திருப்பி அடிப்பாள். நெடுங்காலமாக பெண்களின் ஆடை குறித்து பேசிவரும் தமிழ்நாட்டில், காலா படத்தில் ஒரே ஒரு காட்சி மூலம் அதனை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் ரஞ்சித். பெண்ணுக்கு சுயமரியாதை என்பது வலுக்கட்டாயமாக ஆடை களையப்படும்போது ஓடி ஒளிந்து உடலை மறைத்துக்கொள்வது அல்ல. தனக்கு அநீதி இழைத்தவர்களை எதிர்த்து போரடக் கூடியதில் உள்ளது. மேலும், பெண்ணின் உடலில் புனிதம் எதுவுமில்லை என்றும் அவளது உடலுக்கு ஒருவர் தீங்கிழைப்பதால் அவள் அவமானப்படத் தேவையில்லை எனவும் மிக ஆழமான பெண்ணுடல் பற்றிய அரசியலை ஒரு சிறு காட்சியில் அற்புதமாக காட்டியிருப்பார் ரஞ்சித்.

சார்பாட்ட பரம்பரையில் மாரியம்மாவின் கதாப்பாத்திரமும் எல்லாராலும் கவனிக்க கூடிய கதாபாத்திரமாகும். குறிப்பாக மாரியம்மாவால் சொல்லப்படும் வசனம் ஆட்டம் தான தோத்து தா போ, பரம்பரையில் என்னத்துக்குடா மானத்த எடுத்து வந்து வைக்கிறிங்க என மானம், கெளரவம் என்ற அடையாள அரசியலை கேள்வி எழுப்பக்கூடிய வசனமாக இருந்தது.

திரைத்துறையில் 10 ஆண்டு

திரைப்படம் இயக்குவதோடு மட்டுமில்லாமல் கலை மற்றும் பண்பாட்டு சூழலில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் பா. ரஞ்சித். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து, ஒரு படி உயர ஏதோ ஒரு வழியில் ஒரு உந்து சக்தியாக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித், திரைத்துறையில் பத்து ஆண்டுகளை கடந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஏராளமான இயக்குநர்கள் இருந்தாலும் தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம்

இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவது, தயாரிப்பது மட்டுமின்றி சமூக அக்கரையோடு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நீலம் பண்பாட்டு மையத்தை தொடங்கி அதன் கிளைகளாக நீலம் தயாரிப்பு நிறுவனம் ,மார்கழியில் மக்களிசை,வானம் கலைத்திருவிழா, கூகை திரைப்பட இயக்கம் மற்றும் நூலகம், நீலம் – மாத இதழ் என வெவ்வேறு பெயர்களில் கலை, இலக்கியம், அரசியல் குறித்த நிகழ்வுகளை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.

நீலம் தயாரிப்பு நிறுவனம்

ஒரு தயாரிப்பு நிறுவனம் லாபத்திற்காக மட்டுமே இல்லாமல் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய, அவர்களை எந்தவொரு வேறுபாடின்றி ஒன்றினைக்கும் கருத்துகளை முன்வைக்கும் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது நீலம் தயாரிப்பு நிறுவனம். இயக்குநராக இருந்த பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம், வசூலைக் குவித்ததோடு பாராட்டுக்களையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அடுத்தடுத்த திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

மார்கழியில் மக்களிசை

வழக்கமாக மார்கழி மாதம் சென்னையின் மேடைகளில் கர்நாடக இசை சங்கீதங்கள் மட்டுமே ஒலிக்கும். இந்த சமயத்தில் மார்கழியில் மக்களிசையைக் கொண்டு வந்தார் ரஞ்சித். நாட்டுப்புற இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் கவனிக்கப்படாத கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு பெற்று தங்களின் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டுவதற்கான களமாகவும் அமைந்துள்ளது.

கூகை திரைப்பட இயக்கம் மற்றும் நூலகம்

இந்த நூலகத்தின் மூலமாக சமூக அரசியல் மற்றும் சினிமா, மொழி சார்ந்த தகவல்களை புத்தகங்களின் வாயிலாக உதவி இயக்குநர்கள் பெற இயலும். மேலும் வளரும் சமூகத்தினர் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைப் பரவலாக்கும் முயற்சியில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரமான சமூக நீதியின் மீது திடமான நம்பிக்கை கொண்ட கலைஞர்களையும் அவர்களின் வழி நம்பிக்கையான சினிமாக்களையும் படைப்புகளையும் உருவாக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓவியம், சினிமா, இலக்கியம், நாடகம், இசை என பல்வேறு கலைத் துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது கூகை. அதோடு சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், விமர்சகர்கள் எனப் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்.

வானம் கலைத்திருவிழா

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்றுவதே வானம் கலைத்திருவிழா. கலையின் மூலம் மக்களின் ஒற்றுமையை சாத்தியப்படுத்தலாம் என்ற முயற்சியே இந்த கலைத்திருவிழா.
விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தை களுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப் பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளை வானம் கலைத்திருவிழா ஒன்றிணைக்கிறது.

நீலம் – மாத இதழ்

நீலம் பண்பாட்டு மையத்தின் இன்னொரு அங்கமாக நீலம் என்ற பெயரில் கலை இலக்கிய அரசியல் மாத இதழ் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் இதுவரை கையெழுத்துப் பிரதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இலக்கிய சிறுபத்திரிகைகள் வெளி வந்துள்ளன. சிறுகதை, கவிதை, கட்டுரை என்பதோடு மட்டுமல்லாம் ஓவியர்களை கவனப்படுத்தும் விதமாக நீலம் கலை இலக்கிய அரசியல் மாத இதழ் அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் திரைச் சூழலில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட

பா.ரஞ்சித்தின் பயணம் தொடரட்டும். எளிய மக்களின் சினிமாவை தொடர்ந்து முன்னெடுக்கட்டும்.

 

ப. பரசுராமன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.