எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டினார்.
அமமுக பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில், பிபின் ராவத், விவேக், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சொத்துவரி, மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருந்த நிலையில், தற்போது அந்தப் பதவிக்கான தேர்தலை நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், தன்னுடைய பதவியை பறித்துவிட்டார்கள் என்ற கோபத்தில் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிற்காலத்தில் தனது தவறை உணர்ந்து மாறிவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமியே காரணம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








