ஒடிசா ரயில் விபத்துக்கு பஹனகா ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம் என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கணினி முறையில் இயங்கும் இண்டர் லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்ததும் அம்பலமாகியுள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாகவும், ‘எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவே விபத்துக்கு காரணம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ஒடிசா மாநில அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்த நிலையில், அதை ஏற்று பல்வேறு பிரிவுகளின்கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337, 338, 304 A, 34 மற்றும் ரயில்வே சட்டம் 153, 154, 175 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, ஒடிசா மாநிலத்தில் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த விபத்து மனித தவறால் நடந்ததா, சதி வேலை காரணமா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதுதவிர, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ரயில்வே ஊழியர்கள், மீட்பு படையினர், உள்ளூர் அதிகாரிகள், விபத்தை நேரில் பார்த்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் சிபிஐ அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்டி வருகின்றனர். அவர்களுடன் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்களும் விபத்து நடந்த பகுதியில் இருந்து பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்றும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கும் நிலையில், ரயில்வேயில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி ரயில்வே நிபுணர்களின் கருத்துகளையும் சிபிஐ அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதில் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
பஹனகா ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கணினி முறையில் இயங்கும் இண்டர் லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பஹனகா ரயில் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது; அதோடு லாக் புத்தகம், ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை, சிக்னல் அறைகளுக்கு சீல் வைகப்பட்டன.மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த ரயிலும், சறக்கு ரயில் உட்பட பஹனகா ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 170 ரயில்கள் கடந்து செல்லும் பஹனகா பஜார் ரயில் நிலையத்தில் சுமார் 7 உள்ளூர் ரயில்கள் நின்று செல்லும். அவைகளும் மறு உத்தரவு வரும் வரை நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.