கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிப்பறி மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில்
ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த 5 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாவலூர் அடுக்குமாடிக் குடியிருப்பு
பகுதியில் கத்தியைக் காட்டி வழிப்பறி மற்றும் அடிக்கடி போதை ஆசாமிகள் சிலர்
பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் மணிமங்கலம் சரக
உதவி ஆணையர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன் படி நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாக்கு என்கிற வினோத்(22) ,
பார்த்திபன் (22) சுரேஷ் (21), பிரேம்குமார் (19), குகன் (19) ஆகிய 5 பேர்
தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை அருகே பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார்
கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்
உள்ளதும், கடந்த 4 ஆம் தேதி படப்பை அருகே சரவணன் என்பவரை கொலை முயற்சி
செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றதும் அந்த சரவணனை மீண்டும் கொலை செய்வதற்காக
ஆயுதங்களுடன் பள்ளிக்கரணை அருகே பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது.
இதில் தனிப்படை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது வினோத் தடுக்கி விழுந்து
கால் உடைந்ததாக மணிமங்கலம் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மேற்படி பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்புடைய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கத்திகளையும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







