ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் காலதாமதம் செய்கிறார் என தெரியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றிக் கொடுத்து நேற்றுடன் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவசர காலத்து சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தந்தார். அதிலுள்ள அதே சரத்துக்கள் தான் சட்ட முன்வடிவுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சில சந்தேகங்கள் கேட்டவுடன், 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலைக்குள் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் ஒருவித நோய் என்று அறிவித்துள்ளது. இந்த நோயை ஒழிக்க வேண்டியது நமது தலையாய பணி. இந்த பணியைத்தான் தமிழக அரசு செய்துள்ளது.
தமிழக அரசு எல்லாவிதமான, முறையான பதில்களையும் ஆளுநரிடம் அளித்துள்ளது. இதில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஏன் ஆளுநர் காலதாமதப்படுத்தகிறார் என்பது தெரியவில்லை. அதற்கான காரணம் அவருக்குத்தான் தெரியும். தற்போது அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான், இனிமேல் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க முடியும்” என்று தெரிவித்தார்.