தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துகொண்டு உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 350 மில்லி மீட்டர் அளவிற்கு மழைநீரின் அளவானது பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம் அல்லிகுட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தந்தை சகோதரி மற்றும் மகன் பாலசபரியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழைக் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது அதில் சிறுவன் பாலசபரி உள்பட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சுவர் இடிந்த விழுந்த விபத்தில் ராமசாமி அவரது தந்தை ஏழுமலை, சகோதரி காளியம்மாள் மற்றும் காளியம்மாளின் குழந்தைகள் புவனா, மாரியப்பன் ஆகிய ஐந்து பேர் காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு முழுவதும் மழை பெய்து வந்ததன் காரணமாக, மண் சுவர் என்பதாலும் மழைநீரில் சுவர் முழுவதும் ஊறி, ஆறு பேர் மீதும் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.







