‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அவ்வப்போது போராடி வருகின்றனர். கடந்த டிச.26ம் தேதி மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே 30வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில், பணி நிரந்தரம் செய்ய கோரி 17-வது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.2,500 அதிகரித்து, ரூ.15,000 ஆகவழங்கப்படும் எனவும் அத்துடன் மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம் எனவும் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டிளித்தார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவங்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கொடுத்த உறுதியின்படி போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.







