அதிமுக மக்கள் பிரச்னைகளுக்கு போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது என கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தென்மேற்கு மாவட்டம், திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் முப்பெரும் விழா மற்றும் பொது மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினருமான த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ, விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டம் கொண்டு வந்த போது எதிர்த்தது திமுக மட்டும்தான் என்றார். இதனை எதிர்த்து போராடாத அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது. அதிமுக, மக்கள் பிரச்னைகளுக்கு போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
புதிய கல்வி கொள்கை மூலம் குல கல்வியை கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்லூரிக்கு செல்லாத நிலை உள்ளது. தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் இதனை எதிர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார். காலநிலை
மாற்றத்தை இந்தியாவிலே சிந்திக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கேள்விகளுக்கு சுப.வீரபாண்டியன் பதிலளித்தார். அப்போது, அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன
என பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக ஆட்சி – அதிமுக காட்சி என விளக்கமளித்தார். தமிழில் எப்போது ஒரு பொருளுக்கு முன் அ என்ற எழுத்தை
சேர்த்தால் அது எதிர் பொருளைதான் தரும். அதுபோல திமுகவிற்கு எதிர் பொருள் அதிமுக அவ்வளவுதான் என்றார்.
அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான காரணம் என்ன என பொதுமக்களில் ஒருவர் கேள்வியெழுப்பிதற்கு பதிலளித்த அவர், மதம் என்ற பெயரால் மக்களை பிளவு படுத்தும் முயற்சியை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதேனும் நிகழ்வை நடத்த களவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம் என குற்றஞ்சாட்டினார்.
-இரா.நம்பிராஜன்








