இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியதால்…

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியதால் இந்த வெற்றி தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. கேப்டன் பவுமா 3 ரன்களில் ஆட்டமிழக்க, குவின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் எடுத்தார். ரோசெள கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் பதிவு செய்தார்.

இது இவருக்கு முதல் சதம் ஆகும். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்களில் சஹர் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் ஆனார். மில்லர் 19 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
அதிகபட்சமாக இந்தியா சார்பில், சஹர், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களம் புகுந்த இந்தியா 18.3 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டானார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 27 ரன்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதையடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடினார். மற்றொரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், பிரிடோரியஸ் பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

அப்போது அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்தடுத்த களம் புகுந்த அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அஸ்வின் ஆகிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தீபக் சாஹர் 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரமமாக இருந்தார். தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என மொத்தம் 46 ரன்கள் எடுத்து மகராஜ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அவர் அரை சதம் பதிவு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது. இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை இந்திய சேர்த்து தோல்வியைத் தழுவியது. வேன் பர்னெல், லுங்கி கிடி, கேசப் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகலையும் கைப்பற்றினர். ரபாடா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். தொடரைக் கைப்பற்றியதற்கான கோப்பையும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.