”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில்…

புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

”உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. சனாதர்மத்தின் மாணவனாகிய நான், பல ரிஷிகளின் நூல்களை படித்தவன். அதுபோல் வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்.

அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். இந்திய பண்பாட்டில் சிறு தெய்வ, பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.

ஆனால் வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்சினை உருவானது. கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் 1852ல்
இந்தியாவை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் சமூக கட்டமைப்பு இருக்க கூடாது அதை குலைத்து விட வேண்டும் எனவும், இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது. எனவே அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும், கீழாக நாகரிகத்தை அழிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளார்.

தொடர்ந்து நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் எதிர்பார்த்தும், கவனித்துக்கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும். அவ்வாறாக வளர்ச்சிப்பாதையை செல்லும் போது “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் வார்த்தையை ஏற்போம்.”

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.