கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 100 ரூபாயை தொட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று தொடர்ச்சியாக 100 ரூபாய்க்கே தக்காளி விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாய் என அறிவிக்கப்பட்டாலும் சில்லறை கடைகளில் 100 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தக்காளி பயன்பாட்டிற்கு உள்நாட்டு விளைச்சல் மற்றும் வெளிமாநில வரத்தை நம்பியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்க்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால் வெறும் 600 முதல் 700 டன் தக்காளி வரத்துதான் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







