அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 650 வாகனங்களில்…

சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 650 வாகனங்களில் 7,300 டன்களுக்கு அதிகமான காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.  அந்த வகையில் அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலை நிலவரம்: 

  • தக்காளி ரூ.38
  • பெரிய வெங்காயம் ரூ.32
  • சின்ன வெங்காயம் ரூ.60
  • கேரட் ரூ.45
  • பீன்ஸ் ரூ.35
  • பீட்ரூட் ரூ.50
  • சவ்சவ் ரூ.20
  • முள்ளங்கி ரூ.35
  • முட்டைகோஸ் ரூ.15
  • வெண்டைக்காய் ரூ.40
  • கத்தரிக்காய் ரூ.25
  • காராமணி ரூ.45
  • பாகற்காய் ரூ.40
  • சுரைக்காய் ரூ.25
  • முருங்கைக்காய் ரூ.120
  • சேனைக்கிழங்கு ரூ.35
  • காலிபிளவர் ரூ.20
  • இஞ்சி ரூ.100
  • அவரைக்காய் ரூ.35
  • பீர்க்கங்காய் ரூ.35
  • எலுமிச்சை ரூ.50
  • கோவைக்காய் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதிகபட்சமாக  பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது.  மொத்த விலையில் ரூ.400-க்கும்,  சில்லறை விலைக்கடைகளில் ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தையும் கோயம்பேடு சந்தையில் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடபட்டதால் இதற்கான பொருள்கள் வாங்க சிறப்பு சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.   இதனால் சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியது.

இதனைத் தொடர்ந்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவகையின் விலையும் சற்று அதிகரித்துள்ளன.  அதன்படி 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.500, 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.