பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவினை முன்னிட்டு தென்காசியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.4 ஆயிரத்திற்கும், பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்காற்றும் பொங்கல் பானை, கரும்பு, பச்சரிசி, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவைகளை வாங்க தற்போது முதல் பலர் கடைகளை நோக்கி படையெடுத்து வரும் சூழலில், பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலையானது, தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. உதாரணமாக, மல்லிகைப்பூ ஒரு கிலோ நேற்று ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்ட சூழலில், இன்று ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 2,500 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.3,000க்கும், கலர் கேந்தி நேற்று ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.120க்கும், செவ்வந்தி நேற்று ரூ.180 விற்பனை செய்யப்பட்ட சூழலில், இன்று ரூ.240 க்கும், பட்டன் ரோஸ் நேற்று ரூ.240க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.300க்கும் மஞ்சள் கேந்தி நேற்று ரூ 80க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை அதிகமாக இருந்த போதிலும், பொங்கல் பண்டிகையொட்டி தேவை இருப்பதன் காரணமாக ஏராளமான மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்று வருகின்றனர்.

மேலும், தற்போது மாவட்ட முழுவதும் அளவுக்கு அதிகமான பனி பொழிவு காணப்பட்டு வருவதால் பூக்களின் உற்பத்தியானது குறைந்து காணப்படுவதாலும், நாளை மகர ஜோதி விழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொண்டாடப்பட உள்ளதால், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருந்து பூக்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டு வருவதால் தற்போது இந்த பூக்களின் விலை அதிகமாக காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







