தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை களைகட்டுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







