மதுரையின் மிக பெரிய கண்மாயான மாடக்குளம் கண்மாய் நீரை, பேரிடர் காலத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் திறந்து விடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிப்பதற்காக திறக்க கூடாது என்றும், மீன்பிடி உரிமையை ரத்து செய்யக் கோரியும் மாடக்குளத்தைச் சேர்ந்த பரணிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வலைகளை பயன்படுத்தி மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, மீன் வளர்க்க யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் கண்மாயில் தானாக இயற்கையான முறையில் வளரும் மீன்கள், குறிப்பிட்ட காலத்தில் இறந்துவிட்டால் தண்ணீர் மாசு ஏற்படும் என்றும் கூறினர். இதை தடுக்கும் வகையில் அங்குள்ள மீன் பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன் பிடித்துக் கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
அதே போல் மனுதாரர் தரப்பில், “கண்மாயின் ஷட்டரை சில தனிநபர்கள் திறந்துவிடுகின்றனர். இதனால், போதியளவு நீரைத் தேக்க முடியவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது” என வாதிடப்பட்டது.
இரண்டு தரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வலைகளை பயன்படுத்தி மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என்றும் அவசர பேரிடர் காலத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் கண்மாயில் இருந்து தண்ணீரை திறக்க கூடாது என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
– இரா.நம்பிராஜன்








